இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் ஸ்மார்ட்போன் அல்லது மொபைல் போன் பயன்படுத்தாத நபரே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. ஸ்மார்ட்போன் இல்லாமல் ஒருவர் தனது இயல்பு வாழ்க்கையை சுமூகமாக நடத்த இயலாது என்ற நிலையில், அனைவரது கையிலும் ஒரு ஸ்மார்ட்போன் கட்டாயம் உள்ளது. அதே சமயத்தில் நம்மிடம் உள்ள ஸ்மார்ட்போன் அல்லது மொபைல் போனை சரியாக பராமரிக்கும் வழிமுறைகளைப் பற்றி பலருக்கும் இன்றுவரை சரியான புரிதல் இல்லை. குறிப்பாக போனை சார்ஜ் செய்வதில்கூட நாம் கவனமாக இருக்க வேண்டும் என்பது பலருக்கும் இன்றுவரை புரிவதில்லை.
நம்மில் பலரும் நாள் முழுவதும் போனை பயன்படுத்திவிட்டு இரவு நேரங்களில் தூங்கச் செல்வதற்கு முன் போனை சார்ஜ் போட்டுவிட்டு தூங்க சென்று விடுகிறோம். இரவு நாம் தூங்க செல்வதிலிருந்து காலை கண் விழித்து சார்ஜிலிருந்து போனை துண்டிக்கும்வரை பேட்டரி தனது 100 சதவீத கொள்ளளவை எட்டினாலும், இரவு முழுவதும் போன் சார்ஜில் இருந்திருக்கும். உண்மையிலேயே இது சரியான வழிமுறையா என்ற கேள்வி பலரது மனதிலும் இருக்கலாம். அதற்கான விடையைத்தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
இன்றைய நவீன ஸ்மார்ட்போன்களில் லித்தியம்-அயன் பேட்டரிகள்தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. என்னதான் இவை நவீன ரகமாக உற்பத்தி செய்யப்பட்டு, அதிக செயல்திறன் பொருந்தியதாக இருந்தாலும் அவற்றுக்கும் ஓர் எல்லை உண்டு என்பதை நாம் உணர்வதில்லை.
உதாரணத்திற்கு நமது ஸ்மார்ட்போன் முழுவதுமாக சுவிட்ச் ஆஃப் ஆகும்வரை, நீங்கள் அதனை பயன்படுத்தினால், உங்களது ஃபோனின் பேட்டரியின் வாழ்நாள் பாதிக்கப்படுவதோடு, அதன் செயல்திறனும் குறையும் என்ற உண்மை பலருக்கும் புரிவதில்லை. மேலும், உங்களது போனை சார்ஜ் செய்த பின்னர், அது தனது 100 சதவீத கொள்ளளவை எட்டிய பின்பும் பல மணி நேரம் போனை சார்ஜிங்கில் விட்டுவிடுவது கட்டாயமாக அதன் செயல்திறனை பாதிக்கும்.
எனவே, எப்போதும் தேவைக்கு அதிகமான நேரம் போனை சார்ஜில் வைத்திருப்பதை தவிர்ப்பது நல்லது. மேலும், நாம் பயன்படுத்தும் போனின் பேட்டரியானது 100 சதவீத சார்ஜிங்கை எட்டியவுடன், அதனை சார்ஜில் இருந்து எடுத்துவிடுவதை உறுதி செய்துகொள்ள வேண்டும். தேவைக்கு அதிகமாக நீங்கள் போனை எவ்வளவு சார்ஜில் விடுகிறீர்களோ, அந்த அளவிற்கு அதன் வாழ்நாள் குறையும்.
ஆனால், தற்போது வரும் நவீன ஸ்மார்ட்போன்களில் பேட்டரி முழு சார்ஜிங்கை எட்டியவுடன், தானாகவே துண்டித்துக் கொள்ளும் வசதி உள்ளதே, இதனால் பிரச்சனை ஏற்படாது என நீங்கள் நினைக்கலாம். ஆனால் என்னதான் டிஜிட்டல் முறையில் நீங்கள் போனை சார்ஜில் இருந்து துண்டித்தாலும் நேரடியாக சார்ஜர் இணைப்பை துண்டிப்பதுதான் எப்போதும் முழுமையான மற்றும் பாதுகாப்பான வழிமுறை ஆகும். எனவே இரவு முழுவதும் போனை சார்ஜ் செய்வதை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்.